நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது வழக்கு : சிறையில் அடைக்க மறுத்த, நியாயமான மாஜிஸ்திரேட்டுக்கு நீதிபதி பாராட்டு
நகைச்சுவையாக பேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது காவல்துறை பதிந்த வழக்கை ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை, கைது செய்யப்பட்டவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட்டைப் பாராட்டியுள்ளது.
மதிவாணன் என்பவர் செப்டம்பர் மாதத்தில் தனது மகள், மருமகனுடன் திண்டுக்கல் சிறுமலைக்குச் சுற்றுலா சென்றுள்ளார். "துப்பாக்கிப் பயிற்சிக்காகச் சிறுமலை பயணம்" என பேஸ்புக்கில் பதிவிட்ட அவர் மீது வாடிப்பட்டி காவல்துறையினர், கூட்டுச்சதி, குற்றச்செயல்களில் ஈடுபட முயல்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.
அவரைக் கைது செய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நகைச்சுவைக்காக பேஸ்புக்கில் பதிவிட்டதை அறிந்த மாஜிஸ்திரேட்டு அருண், மதிவாணனைச் சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்துவிட்டார். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிவாணன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், நகைச்சுவையாகக் கருத்துப் பதிவிட்டவரைக் காவலில் வைக்க மறுத்த வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டைப்போலத் தமிழகத்தில் உள்ள மற்ற மாஜிஸ்திரேட்டுகளும் செயல்பட வேண்டும் எனக் கூறிப் பாராட்டினார்.
மனுதாரரிடம் இருந்து காவல்துறையினர் எந்த ஒரு ஆயுதத்தையும் கைப்பற்றவில்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லையென்றும் கூறி வழக்கை ரத்து செய்தார்.
ஒவ்வொருவரும் நகைச்சுவை உணர்வுடன் இருக்கப் பழக வேண்டும் என்றும், அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக நகைச்சுவை உணர்வைக் கொண்டு வரும் காலம் நெருங்கி விட்டதாகவும் நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.
Comments