விஜய் உறவினர் வீட்டில் ஐடி ரெய்டு: சீன செல்போன் நிறுவனங்களில் 2ஆம் நாளாக தொடரும் சோதனை!

0 7148

சீன செல்போன் நிறுவனங்களிலும், அவற்றுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓப்போ, ஷாவ்மி ஆகிய செல்போன் நிறுவனங்களிலும் அவற்றுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரில், தமிழ்நாட்டில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்பட 30 இடங்களில் உள்ள செல்போன் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதன் எதிரொலியாக 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பிரிட்டோவின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரிட்டோவின் கெரி இண்டவ் லாஜிஸ்டிக்ஸ்  என்ற நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்ணடி, எண்ணூர் பகுதியில் உள்ள பிரிட்டோவின் சரக்குகளை கையாளும் நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீன செல்போன் நிறுவன உதிரிபாகங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கையாள்வதில் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது, அதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கெரி இண்டவ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவரான சேவியர் பிரிட்டோ சுமார் 14 நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது இண்டவ் குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் பல்வேறு நாடுகளுக்கு கண்டெயினர்கள் வாயிலாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது. மேலும், சீன செல்போன் நிறுவன உதிரிபாகங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலும் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments