ஆருத்ரா தரிசனம்-பக்தர்கள் பரவசம்

0 2693
ஆருத்ரா தரிசனம்-பக்தர்கள் பரவசம்

தமிழகம் முழுவதும் ஆருத்ரா தரிசன விழாவினை ஓட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் என இரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த 11ந்தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா காட்சி முடிந்தது.

அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்து கோவிலுக்குள் சென்றனர்.

இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்ரசபை ரகசிய பிரவேசம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி - குழல்வாய்மொழியம்மை கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் சிவனுக்கும், உற்சவ மூர்த்தியான நடராஜருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வர ர் கோயில், சிவாயம் சிவபுரீஸ்வர ர் கோவில், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வர ர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.

 திருப்பூர் சுகரீஸ்வர சுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற நடராஜர் திருக்கோயில் உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உடையார் கோவிலில் குளத்தின் நடுவே கட்டப்பட்ட கரவந்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

 திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்திலுள்ள ஸ்ரீலஸ்ரீ சட்டி சாமிகள் ஆசிரமத்தில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜர் , அம்பாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் முழுவதும் தமிழிலேயே நடைபெற்றது.

 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments