கோவா விடுதலை நாள்.. பிரதமர் மோடி பங்கேற்பு

0 3414

கோவாவின் 60ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ஆளுமையிலும், தனியாள் வருமானத்திலும், கொரோனா தடுப்பூசி போடுவதிலும் நாட்டிலேயே கோவா முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின், போர்த்துக்சீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்த கோவாவிலும் விடுதலைப் போராட்டம் வலுப்பெற்றது. அங்குள்ள ஆட்சியாளர்கள் கடும் அடக்குமுறைகளைக் கையாண்ட நிலையில் 1961ஆம் ஆண்டு இந்தியப் படைகள் கோவாவுக்குள் நுழைந்து போர்த்துக்கீசியர்களை விரட்டியடித்தனர்.

450 ஆண்டுக்காலம் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்த கோவாவை விடுவித்த டிசம்பர் 19ஆம் நாள், ஆண்டுதோறும் விடுதலைநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

 

இதையொட்டி விழாவில் பங்கேற்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் வரவேற்றார். பனாஜியில் ஆசாத் மைதானத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியக் கடற்படை போர்த்துக்கீசியர்களை முற்றுகையிட்டதன் நினைவாக நடைபெற்ற கடற்படை அணிவகுப்பையும், சாகசக் காட்சிகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட உள்ள போர்க்கப்பலும் வெள்ளோட்டமாக இந்த அணிவகுப்பில் பங்கேற்றது.

 

விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்குப் பிரதமர் மோடி பொன்னாடை அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.புதுப்பிக்கப்பட்ட அகடா கோட்டைச் சிறை அருங்காட்சியகம், கோவா மருத்துவக் கல்லூரியின் உயர் சிறப்பு மருத்துவப் பிரிவு, மருத்துவமனை, விமானிகளுக்கான பயிற்சி மையம், துணை மின் நிலையம் ஆகியவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் பெரும்பகுதி முகலாயர்களின் ஆட்சியில் இருந்தபோது கோவா போர்த்துக்கீசியரின் ஆதிக்கத்தில் வந்ததாகக் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கோவா மக்களும் இந்தியத் தன்மையை மறக்கவில்லை, அதேபோல இந்தியாவும் கோவாவை மறக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இத்தாலி பயணத்தின்போது வாடிகனுக்குச் சென்று போப் பிரான்சிசைச் சந்தித்து இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்ததை நினைவுகூர்ந்தார். அது தனக்குக் கிடைத்த மாபெரும் பரிசு எனப் போப் கூறியது, இந்தியாவின் பன்முகத் தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அன்பைக் காட்டுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மனோகர் பாரிக்கரின் செயல்பாட்டில் இருந்து கோவா மக்களின் நேர்மை, திறமை, கடின உழைப்பு ஆகியவற்றை நாடறிந்ததாகக் குறிப்பிட்டார். ஒருவர் இறுதி மூச்சு வரை தன் மாநிலத்துக்கும், மக்களுக்கும் எப்படி அர்ப்பணிப்புடன் இருக்க முடியும் என்பதை அவரது வாழ்க்கையில் பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆளுமையிலும், தனியாள் வருமானத்திலும், கொரோனா தடுப்பூசி போடுவதிலும் கோவா முன்னிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments