சொதப்பலில் முடிந்த கடத்தல் முயற்சி.. வீணாகிப்போன ராஜதந்திரம்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மீன் வியாபாரியை கடத்திச் சென்று பணம் பறிக்க முயன்ற கும்பல் போலீசில் பிடிபட்டுள்ளது. போலி போலீசை செட்டப் செய்து தன்னிடம் பணம் பறித்த தொழில் கூட்டாளியை பழிவாங்குவதற்காக போட்ட ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிப் போன கதையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மீன் வியாபாரம் செய்து வரும் சிவா என்ற நபர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வரும் தனது தாயைப் பார்க்க அவ்வப்போது வந்து செல்வார் சிவா. கடந்த 15ஆம் தேதி வழக்கம்போல் தனது தாயைப் பார்க்க வந்த சிவாவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது.
பின்னர் சிவாவின் மனைவிக்குப் போன் செய்து, 6 லட்ச ரூபாய் எடுத்து வரும்படி கூறியுள்ளனர். தொடர்ந்து சிவாவை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளனர். இதனிடையே கணவன் கடத்தப்பட்டது தொடர்பாக சிவாவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், கடத்தல்காரர்கள் வரச் சொன்ன இடத்துக்கு அவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பி, போலீசார் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். போலீசார் வருவதை மோப்பம் பிடித்த கடத்தல் கும்பல், சிவாவை இருட்டான ஓர் இடத்தில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சிவாவின் மனைவிக்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து டிராக் செய்த போலீசார், கடத்தல் கும்பலைச் சேர்ந்த மணிகண்டன், ரமேஷ், அகஸ்டின் ராஜா, கருத்தப்பாண்டி, ஏமராஜா என 5 பேரை கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவனான மணிகண்டன் மீதும் கடத்தப்பட்ட சிவா மீதும் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் தொழில் கூட்டாளிகளாகவும் இருந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் மணிகண்டனிடம் நிறைய பணம் இருப்பது தெரியவந்து, அதனைப் பறிக்க எண்ணிய சிவா, தன்னுடைய கூட்டாளிகள் இருவருக்கு போலீஸ் வேடம் அணிவித்து மணிகண்டனை மிரட்டுமாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, போலி போலீஸ் இருவரும் மணிகண்டன் மீதுள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி அவனை மிரட்டி, 3 லட்ச ரூபாய் வரை பணம் பறித்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய சிவா, போதையின் உச்சத்தில் மணிகண்டனை மிரட்டி பணம் பறித்த விவரத்தை உளறிக் கொட்டி பெருமைப்பட்டுள்ளான். இந்த விவரம் தெரியவந்து கோபத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன், சிவாவைப் பழிவாங்க எண்ணியே அவனைக் கடத்தி அடித்து, உதைத்து பணம் பறிக்க முயன்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments