திருப்பூரில் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயிலும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்தவரை கைது செய்யக்கோரி பெற்றோர்கள் சாலை மறியல்.!
திருப்பூர் மாவட்டம் கே.ஜி.புதூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்தவரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து காவல்துறையினர் அனுப்பிவைத்தனர்.
சிறுமிக்கு கடந்த 14ஆம் தேதி பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் புகாரளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நபரை குழந்தைக்கு அடையாளம் தெரியாத காரணத்தால் போக்சோ பிரிவில் ”அடையாளம் காணக்கூடிய நபர்” என்ற தனிப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் திரண்டு, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சுமார் 4 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்குவந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா இரண்டு நாட்களுக்குள் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Comments