பறிபோனது 6 மாத பிஞ்சின் உயிர்.. மூடநம்பிக்கையின் உச்சம்.. இப்படியும் ஒரு கொடூரம் !

0 6036
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 6 மாத கைக்குழந்தையை நரபலி கொடுத்த தாத்தா - பாட்டி கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 6 மாத கைக்குழந்தையை நரபலி கொடுத்த தாத்தா - பாட்டி கைது செய்யப்பட்டனர். தங்களுடைய உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த தம்பதியின் மூட நம்பிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மல்லிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நசுருதீன் - ஷாலிகா பேகம் தம்பதி. இவர்களுடைய 6 மாத பெண் குழந்தை ஹஜாரா. புதன்கிழமை இரவு வழக்கம்போல் தனது அருகே குழந்தையை கிடத்திக் கொண்டு உறங்கியுள்ளார் ஷாலிகா பேகம்.

வியாழக்கிழமை காலை அருகில் குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீடு முழுவதும் தேடிப் பார்த்துள்ளார். குழந்தை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அதே வீட்டில் 2 அறைகள் தள்ளி வசித்து வந்த ஷாலிகா பேகத்தின் சின்ன மாமியார், அதாவது நசுருதீனின் சித்தி ஷர்மிளா பேகம், குழந்தை தவறுதலாக தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்து கத்திக் கூச்சல் போட்டுள்ளார் ஷாலிகா பேகம். 6 மாத கைக்குழந்தை எப்படி 2 அறைகள் கடந்து வந்து, தண்ணீர் தொட்டியில் விழுந்திருக்கும் என ஷாலிகா பேகத்தின் உறவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். பின்னர் ஷாலிகா பேகத்தையும் அவரது குடும்பத்தையும் தற்காலிகமாக சமாதானம் செய்து, அவசர அவசரமாக குழந்தையின் உடலை அருகிலுள்ள இடுகாட்டில் புதைத்துள்ளனர். ஆனால் அண்டை வீட்டார் மூலம் விவகாரம் போலீசாருக்குச் சென்றுள்ளது.

விசாரணையில் குழந்தையின் பாட்டியான ஷர்மிளா பேகம் அவரது கணவர் அசாருதீனின் உடந்தையோடு, பிஞ்சுக் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்திக் கொன்றது தெரியவந்தது.

அசாருதீனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், பல இடங்களில் சிகிச்சையளித்தும் சரியாகாததால் புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர். பட்டினத்தில் தங்கியுள்ள கேரளாவைச் சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம் என்பவனை அணுகியுள்ளார் ஷர்மிளா பேகம்.

புதிதாகப் பிறந்த ஒரு உயிரை நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என மந்திரவாதி முகமது சலீம் பரிகாரம் கூறியுள்ளான். அதனை நம்பி, தாய் அயர்ந்து தூங்கிய நேரம் பார்த்து குழந்தையைத் தூக்கிச் சென்ற ஷர்மிளா பேகம், தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொலை செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

தற்போது அசாருதீன் - ஷர்மிளா பேகம் , மந்திரவாதி முகம்மது சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக குடும்பத்தினர் பலரிடமும் விசாரணை நடைபெற்று வரும் அதே வேளையில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments