கழிவறைச் சுவர் இடிந்து மாணவர்கள் 3 பேர் பலி.. பள்ளியின் தாளாளர் உள்பட மூவர் கைது..!
திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில், பள்ளியின் தாளாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள நூறாண்டுக்கு மேல் பழைமையான சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் காலை பாட இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்க மைதானத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றனர்.
அப்போது கழிவறை வாயிலின் முன்னிருந்த மறைப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய எட்டாம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன், ஒன்பதாம் வகுப்பு மாணவன் அன்பழகன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவன் சுதீஷ் மருத்துவமனையில் உயிரிழந்தான். மேலும், படுகாயங்களுடன் 4 மாணவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து பெற்றோர் ஏராளமானோர் பள்ளிக்குத் திரண்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்குப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்ட நிலையில், உரிய சிகிச்சைகளை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் வலுவான அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார். சிறப்புக்குழு அமைத்து மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறினார்.
இதனிடையே உயிரிழந்த மாணவர்கள் மூவரின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்ச ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் குடும்பங்களுக்குத் தலா மூன்று லட்ச ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பாளையங்கோட்டை மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டன. அதன் பின் மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், விபத்து தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர், கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது பிணையில் வெளியில் வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments