இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

0 4144

நாட்டில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், நாட்டின் 11 மாநிலங்களில் இதுவரை ஒமிக்ரான் வகை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 32 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 22 பேருக்கும் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 91 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும், தற்போதைய சூழலில் ஒமிக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறுமேயானால், டெல்டா வகையை விட புதிய வகை வைரஸ் அதிகம் பேரை பாதிக்கும் என்றும் லாவ் அகர்வால் எச்சரித்தார்.

மேலும், உலக நாடுகளை விட பன்மடங்கு அதிகமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறையும் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என குறிப்பிட்டார்.

இதனை அடுத்து பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும் பொது இடங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புத்தாண்டு மற்றும் பண்டிகைகளை பொதுமக்கள் கவனத்துடன் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருவதாகவும் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments