2 வருடத்துக்கு முன்னாடி இறந்தவருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போட்டதாக சான்று..! அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அலட்சியம்
காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 500 ரூபாய் பெற்றுக் கொண்டு இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து போனவர்களுக்கெல்லாம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் வழங்கிய கூத்து அரங்கேறி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, தனியார் நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என்று எந்த ஒரு பொது இடத்துக்கு சென்றாலும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அண்டை மாநிலங்களில் உள்ள சபரிமலை மற்றும் திருப்பதி கோவில்களுக்கு சாமி கும்பிட செல்லும் பக்தர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ள அஞ்சும் அசகாய சூரர்கள் போலியாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சான்றிதழ்களை பெற்று சமூகத்தில் தடையின்றி உலா வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆரம்பத்தில் கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டிய சில தனியார் மருத்துவமனைகள், வெளி நாட்டிற்கு தடையின்றி சென்று வருவதற்காக, செல்வாக்கு மிகுந்த தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆதார் விவரங்களுடன் சில ஆயிரங்களை பெற்றுக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சான்று அளித்து வரும் நிலையில், அதற்கு சற்றும் சளைக்காமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் ஆதார் அடையாளச்சான்றுடன் 500 ரூபாய் கொடுத்தால் தடுப்பூசியே போடாமல் சான்றிதழ் வழங்கப்படும் கூத்து அரங்கேறிவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தவகையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள பஞ்சுப் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பொய்யான சான்றளித்து அதிரவைத்துள்ளனர்.
அன்பழகனின் ஆதார் எண்ணை கொடுத்து தடுப்பூசி சான்று கேட்டவர்களிடம் 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு , உயிரோடே இல்லாத அன்பழகன் 2 டோஸ் தடுப்பு ஊசியும் செலுத்திக் கொண்டதாக தடுப்பூசி சான்று வழங்கிய கூத்து அரங்கேறி உள்ளது.
அதே போல 2 வருடத்திற்கு முன்பாக இறந்து போன இந்திரா என்ற மூதாட்டியின் ஆதார்கார்டுடன் 1000 ரூபாயை பெற்றுக் கொண்ட நத்தப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் போலியாக தடுப்பூசி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
2 வருடத்துக்கு முன்னால் இறந்து போனவர் சமீபத்தில் 2 டோஸ் தடுபூசியும் போட்டுக் கொண்டதாக கூறி அரசு பதிவேட்டில் தவறான தகவலை பதிவேற்றம் செய்ததோடு சான்றிதழ் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் வற்புறுத்துவதால், தொழிற்சாலை ஊழியர்கள் பலபேர் இதேபோல் கள்ளத்தனமாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விலைக்கு பெற்று செல்வதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலையின் கோரதாண்டவத்தை கண்முன்னே கண்டவர்கள், அரசை ஏமாற்றுவதாக நினைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் சிலர் தங்களை தாங்களே ஏமாற்றி வருவது வேதனைக்குரியது. மூன்றாவது அலையான ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் மக்களை காக்க அரசு தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி வரும் நிலையில் அதனை நியாயமான முறையில் செயல்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுடன் சேர்ந்து போலிச்சான்று கொடுத்து முறைகேட்டில் ஈடுபடும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
போலி தடுப்பூசி சான்றிதழ் விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் தெரிவித்த போது, இது போன்ற செயல்களில் யார் யார் ஈடுபட்டுள்ளனர் ? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments