1971 போர் வெற்றியின் 50ஆம் ஆண்டு விழா..!
பாகிஸ்தானின் அடக்குமுறையை முறியடித்துப் பெற்ற வெற்றியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி டாக்காவில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வங்கதேசப் படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்குப் பாகிஸ்தான், 1971 மார்ச் 26ஆம் நாளில் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்று வங்கதேசம் என்கிற புதிய நாடாக அறிவித்துக் கொண்டது. இதையடுத்து அங்குச் சென்ற பாகிஸ்தான் படையினர் அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். வங்கதேச விடுதலைப் படையான முக்திவாகினிக்கு உதவியாக இந்திய ராணுவமும் போரில் இறங்கியது. இந்தப் போரின் முடிவில் 1971 டிசம்பர் 16ஆம் நாள் பாகிஸ்தான் ராணுவத்தின் தொண்ணூறாயிரம் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போர் வெற்றியின் ஐம்பதாண்டு நிறைவையொட்டி வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற வெற்றி விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். அவரை அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோர் வரவேற்றனர்.
வங்கதேசப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீது ஏற்றுக்கொண்டார். பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.
பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு, வங்கதேசத்தின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியன பார்வையாளர்களைக் கவர்ந்தன..
விமானத்தில் இருந்து குதித்த வீரர்கள் பாராசூட் மூலம் பாதுகாப்பாகத் தரையிறங்கி சாகசம் நிகழ்த்தினர்.
Comments