பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது 18லிருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு?
பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை பதினெட்டிலிருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது, ஊட்டச்சத்து குறைபாடிலிருந்து காக்க, பெண்களின் திருமண வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். மேலும், இந்த திருமண வயது உயர்வு தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, தாய்மை இறப்பு விகிதத்தை குறைக்கவும், ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து, பெண்கள் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க, திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை அடிப்படையில், பெண்களுக்கான திருமண வயதை பதினெட்டில் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சட்டத்திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படலாம் எனவும், குழந்தை திருமண தடை சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments