ஜோஸ் ஆலுக்காசில் கொள்ளை.. சுவரைத் துளையிட்டு தங்கம், வைரம் அபேஸ்..!
வேலூரில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு, சுமார் 30 கிலோ தங்க வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணியளவில் விற்பனையை முடித்துவிட்டு கடையை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்ற நிலையில், இரவுப்பணியில் 2 காவலர்கள் மட்டும் இருந்துள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த ஊழியர்கள், நகைகள் மாயமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்த போது, நகைக்கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு, உள்ளே புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.
சுமார் 30கிலோ அளவிலான தங்கம், வைர நகைகள், வைர கற்கள் ஆகியவை மாயமாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு மோப்பநாய், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சிசிடிவியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, கொள்ளையர்கள் கேமரா மீது form ஸ்ப்ரேவை அடித்துவிட்டு, கொள்ளையடித்தது தெரியவந்திருக்கிறது. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு. எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நகைக்கடையில் ஆய்வு செய்தனர். ஒரு ஆள் நுழையக்கூடிய அளவுக்கு சுவற்றில் துளைப் போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், தரைத்தளம் மற்றும் முதல் தளத்திலிருந்த நகைகளை அள்ளிச் சென்றதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நகைக்கடையின் பின்புறமுள்ள காலி இடத்தில் விக் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், அதன் மூலம் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என ஆய்வு செய்து வருகின்றனர். இரவுநேர காவலர்களும் பணியில் இருந்ததால், நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலைக்குள் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்தோடு, இரவு நேரத்தில் பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 3 டிஎஸ்பிக்கள், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார். .
Comments