ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.! கண்ணை மறைக்கும் போதை.!
மதுரையில் விபத்தில் இறந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டவாறும் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தவாறும் இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த இளைஞர்கள் இப்படி குத்தாட்டம் போட்டுக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் இருக்கிறது. மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அபி கண்ணன் என்ற அந்த இளைஞன் தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். திங்கட்கிழமையன்று கல்லூரி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் இருந்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தனக்கன்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த அபிகண்ணனின் நண்பர்கள், ஆம்புலன்சுக்கு முன்னால் ஊர்வலமாகச் சென்றனர். ஆம்புலன்சின் மேற்கூரையில் ஏறி நின்றும் ஆம்புலன்சின் பக்கவாட்டு ஜன்னலில் தொற்றிக் கொண்டும் விசிலடித்துக் கொண்டு கூச்சலிட்டவாறே சென்றுள்ளனர்.
அந்த கும்பலில் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களைக் கொண்டு வீலிங் செய்தவாறும், போலீசார் வைத்திருந்த இரும்புத் தடுப்புகளை தூக்கி வீசி சேதப்படுத்தியவாறும் சென்றதாக சொல்லப்படுகிறது. இவர்களது அலப்பறையால், ஆம்புலன்சுக்குப் பின்னால் வந்த வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மதுவோடு தற்போது கஞ்சாவும் சேர்ந்துகொண்டு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகக் வேதனை தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், போதை பழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Comments