முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு: 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

0 4215

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சுமார் 5கோடி அளவுக்கு தங்கமணி சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முந்தைய ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், தங்கமணியின் மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் நாமக்கல், சென்னை, வேலூர், கரூர், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் சோதனை நடக்கிறது. சென்னையில் மட்டும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கோவிந்தம் பாளையத்திலுள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அலுவலகம், அவரது அரசியல் ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம், நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவிந்தம்பாளையத்தில் தங்கமணியின் வீட்டுக்கு முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள், ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.

சேலத்தில் தங்கமணியின் மகன் தரணிதரனின் நெடுஞ்சாலை நகரிலுள்ள வீடு, அஸ்வா பார்க் ஹோட்டல் மற்றும் மரவனேரி உள்பட 3 இடங்களில் சோதனை நடக்கிறது.

சென்னையில் எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலுள்ள தங்கமணியின் அறை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரிலுள்ள தங்கமணியின் வீடு, பட்டினப்பாக்கத்தில் தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீடு, அரும்பாக்கத்தில் தங்கமணிக்கு சொந்தமானதாக கூறப்படும் ஸ்ரீ பிளைவுட்ஸ் நிறுவனம், இந்நிறுவனத்தின் பங்குதாரரான ஜனார்த்தனன் என்பவரது கோயம்பேடு வீடு, நுங்கம்பாக்கம் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், மதுரவாயல், ஷெனாய் நகர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில் சோதனை ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 2016 முதல் 2020 வரை தங்கமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக தனது பெயரிலும் தனது குடும்பத்தினர், உறவினர்கள் பெயரிலும் சொத்து சேர்த்ததாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலில், தங்கமணி மற்றும் அவரது மகன், மனைவி ஆகியோர் மீதிருந்த சொத்து மதிப்பு ஒருகோடியே ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

2021 தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் அவர்களது சொத்து மதிப்பு 8 கோடியே 47 லட்சமாக உயர்ந்திருப்பதாகவும், தங்கமணி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கான முதலீடுகள், செலவினங்கள், வருவாய் மற்றும் வரி விபரங்கள் போக சுமார் 4 கோடியே 85லட்சம் ரூபாய்க்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்து சொத்துக்களை குவித்து இருப்பதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments