தடை செய்யப்பட்ட தேவாலா தங்கச் சுரங்கப்பகுதியில் மனித நடமாட்டம்? துப்பாக்கி ஏந்திய வனத்துறை ரோந்துப் பணிக்கு ஏற்பாடு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தங்கச் சுரங்கம் அமைந்திருந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் தென்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு துப்பாக்கிய ஏந்திய வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேவாலா வனப்பகுதியில் உள்ள மலைத்தொடரில் தங்கம் இருப்பதை அறிந்து, ஆங்கிலேயர் காலத்தில் அங்கு தங்கச் சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. பின்னாளில் எதிர்பார்த்த அளவு தங்கம் கிடைக்காததால், தங்கம் சேகரிப்பை ஆங்கிலேயர்கள் கைவிட்டனர்.
நாடு விடுதலை பெற்ற பின்னர் தங்கச் சுரங்கம் இருந்த பகுதி தடை செய்யப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கப் படிமங்களை சேகரிப்பதற்காக அப்பகுதியில் சிலர் சுற்றி வருகின்றனர் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பை வனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
Comments