செமஸ்டர் தேர்வுகளும் நேரடி தேர்வுகளாகவே நடைபெறும் என யு.ஜி.சி. அனுப்பியதாக கூறிய கடிதம் பொய்யானது - அதிகாரிகள்
இனி வரும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடி தேர்வுகளாகவே நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. அனுப்பியதாக கூறி கடிதம் ஒன்று வெளியான நிலையில், அந்த கடிதம், பொய்யானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடக்கும் என யு.ஜி.சி. அறிவித்ததாக கூறி கடிதம் ஒன்று வெளியானது. டிசம்பர் 10-ந் தேதி எனக் குறிப்பிட்டப்பட்டு வெளியான அந்த கடிதம் தங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை என யு.ஜி.சி. அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
யுஜிசி-ன் கடிதத்தை போலவே யாரோ போலியான கடிதத்தை வடிவமைத்து சமூக வலைதளங்களில் சிலர் உலவ விட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments