மெதுவாக சென்றதால் கண்ணாடி உடைப்பு... ஆம்னி பஸ் அட்டகாசம்..! நடுரோட்டில் தாக்குதல்

0 5236

ஓசூர் அருகே மேடான சாலையில் மெதுவாக சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி, ஆம்னி பேருந்தின் ஓட்டுனர்கள் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சூளகிரி அடுத்த அழகுபாவி என்னுமிடத்தில் மேடான சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.

இந்த சரக்கு லாரியை பின்னால் வந்த சுராஜ் என்ற ஆம்னி பேருந்து வேகமாக முந்திச்சென்று மறித்தது.

பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர்கள் இருவர் , நெடுஞ்சாலையில் வேகமாக செல்லாமலும், பின்னால் வந்த தனது பேருந்துக்கு வழி விடாமலும் செல்வதாகக் கூறி லாரி ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகின்றது.

லாரியில் பாரம் இருப்பதாலும், சாலை ஏற்றமாக இருப்பதாலும் மெதுவாக சென்றதாக லாரி ஓட்டுனர் தெரிவித்த நிலையில் , அவர் தங்களை எதிர்த்து பேசுவதாக கூறி ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள், லாரியின் பக்கவாட்டு கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கினர்.

ஒரு கட்டத்தில் அந்த லாரி ஓட்டுனரை தாக்கிவிட்டு, செல்லும் போது பெரிய அளவிலான பாறாங்கல் ஒன்றை தூக்கி லாரியின் முன்பக்க கண்ணாடியில் வீசி, உடைத்து விட்டு சென்றனர்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச்செல்லும் அந்த ஆம்னி பேருந்து கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படும் நிலையில் கண்ணாடியை உடைத்து சென்றவர்களை அங்கிருந்த மக்கள் கண்டித்தனர்.

ஆனால் லாரியின் கண்ணாடியை உடைத்த வேகத்தில் பேருந்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை படம் பிடித்த அப்பகுதி மக்கள் ஆம்னி பேருந்து ஓட்டுனர்களின் செயலை கண்டித்து சமூக வலைதலங்களில் பதிவிட்டனர். இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர்களை தேடி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றவாகனங்களுக்கு இடையூறின்றி ஸ்லோ லேனில் சாலைகளை பயன்படுத்தினால் இது போன்ற சச்சரவுகளை தவிர்க்கலாம் என்று சுட்டிக்காட்டும் வாகன ஓட்டிகள், அதற்காக லாரி ஓட்டுனரை, தாக்கி லாரியை சேதப்படுத்துவது தவறான முன் உதாரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments