குடி போதையில் லாரி ஓட்டியவருக்கு ஓனர் கொடுத்த போனஸ்..! ஓட்டுனர்கள் போர்க்குரல்..!
30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி மற்றும் சரக்குடன் குடி போதையில் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த ஓட்டுனரை பிடித்து அடித்து துவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் லாரி ஓட்டுனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சரக்கு ஏற்றிச்சென்ற மினி லாரி ஒன்று உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேராததால் தவித்து போன லாரி உரிமையாளர் ஒருவர் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், ஊருக்கு ஒதுக்கு புறமாக நிறுத்தப்பட்ட தனது லாரியின் அருகில் போதையில் நின்ற தனது லாரி ஓட்டுனரை கண்டுபிடித்து போதை தெளிய அடித்து நொறுக்கினார்.
குடும்ப பிரச்சனை காரணமாக மது அருந்தியதாக ஓட்டுனர் தெரிவித்த நிலையில், நாள் முழுவதும் ஓய்வின்றி பொறுப்புடன் வாகனங்களை ஓட்டிச்செல்லும் ஓட்டுனர்களுக்கு மத்தியில் பகலில் சாராயம் குடிப்பதற்காக, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை சராயக்கடைக்கு ஓரங்கட்டியது ஏன் ? என்று கேட்டு அவர் கொடுத்த அடிகள் ஒவ்வொன்றும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருந்தது.
போதையில் இருந்த ஓட்டுனர், தனது தவறை உணர வேண்டும் என்பதற்காக தென்னை மரத்தின் காய்ந்த மட்டையால் அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காசு கேட்டு கொடுக்கலயா? 30 லட்சம் ரூபாய் முதல் உன்னை நம்பி போட்டிருக்கேன் ? இனிமே பகலில் தண்ணி போடுவியா ? எனக்கேட்டு விளாசிய ஒவ்வொரு அடியும் ஓட்டுனருக்கு எச்சரிக்கை பாடம் போல இருந்தது.
ஒரு கட்டத்தில் வலிதாங்காமல் இனி குடிக்க மாட்டேன் என்று அந்த ஓட்டுனர் கதற ஆரம்பித்தார். இருந்தாலும் ஆத்திரம் அடங்காமல் லாரி உரிமையாளர் அடித்தார்.
தான் சாப்பாடு, பணம், என கேட்டவை அனைத்தும் வாங்கி கொடுத்த நிலையில், ஏற்கனவே இந்த ஓட்டுனர் திருச்சியிலும் இதே போல மது அருந்தி விட்டு லாரியை நடுவழியில் போட்டு விட்டதாகவும் , மறுபடியும் அதே போல செய்ததால் ஆத்திரம் தாளாமல் தான் தாக்கியதாக அந்த லாரியின் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த வீடியோவை தமிழ் நாடு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் முகநூல் பக்கத்தில் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் பதிவிட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு லாரி ஓட்டுனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களுக்கு தவறு செய்யும் ஓட்டுனர்களை கண்டிக்க உரிமை உண்டு, ஆனால் இப்படி கண்மூடித்தனமாக அடிப்பதற்கு உரிமை இல்லை என்றும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் கண்டித்துள்ளனர்.
Comments