பிபின் ராவத்துக்கு இந்திய தேசம் பிரியாவிடை.!
மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பீரங்கி குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
குன்னூர் அருகே 8 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் 9 ஆம் தேதி அன்று டெல்லிக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.
டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிபின் ராவது உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். இதன் பின்னர் இன்று காலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் உடல் டெல்லி காமராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் எம்..பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
பிரான்ஸ், இத்தாலி நாட்டின் தூதர்கள், நேபாளம், பூடான் நாட்டின் உயர் ராணுவ அதிகாரிகள் என பலரும் பிபின் ராவத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது பலர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை முப்படையினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளும், வீரர்களும், சீருடை அணிந்து வந்து தங்களத்து தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மதியம் 2 மணி அளவில் பிபின் ராவத்தின் உடல் காமராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடலும் கொண்டு செல்லப்பட்டது.
காமராஜ் சாலையில் தொடங்கிய ஊர்வலம் ராஜாஜி சாலை, தீன்மூர்த்தி சாலை உள்ளிட்ட சாலைகளின் வழியாக சென்ற போது சாலையின் ஓரத்தில் திரண்டு இருந்து மக்கள் மலர்களை தூவியும், முழக்கங்களை எழுப்பியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இறுதி ஊர்வலம் டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள பரார் சதுக்கத்தை அடைந்தது. அங்கும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடலுக்கு அவர்களது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை நடத்தினார்கள்.
இதையடுத்து இருவரின் உடல்களும் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன. அப்போது பீரங்கி குண்டுகளை வானம் நோக்கி முழங்கி முப்படையினர் மரியாதை செலுத்தினார்கள்.
இதோபோல இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சியில் முப்படைகளை சேர்ந்த பேண்டு வாத்திய குழுவினர் 33 பேர் சோக கீதங்களை இசைத்தனர்.
மும்படைகளையும் சேர்ந்த 800 வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 43 ஆண்டுகளாக இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி நாட்டுக்கு இணையில்லா சேவை செய்த ஜெனரல் பிபின் ராவத்திற்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.
Comments