ஓவர் குடியால் வம்பு... டெப்போ முன்பு லேண்டான அரசு பேருந்து ஓட்டுனர்..! படுத்து படுத்து போராட்டம்

0 3359
ஓவர் குடியால் வம்பு... டெப்போ முன்பு லேண்டான அரசு பேருந்து ஓட்டுனர்..! படுத்து படுத்து போராட்டம்

போதையில் பணிக்கு வந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர், புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநரைக் கண்டித்து , நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரை நிர்வாணமாக தரையில் படுத்து போராட்டம் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

குடிபோதையால் கொழுத்தும் வெயிலில் சடலம் போல படுத்துக்கிடந்து போராட்டம் நடத்தும் இவர்தான் அரசு பேருந்து ஓட்டுனர் தனபால்..!

நாகப்பட்டினம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்துவரும் தனபால், தனது ஊரில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான PRTC பேருந்தில் ஏறி வந்துள்ளார். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இறக்கி விடுமாறு கேட்ட நிலையில் அந்த இடத்தில் தங்களுக்கு நிறுத்தம் இல்லை எனக்கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் இறக்கிவிட மறுத்துள்ளார். இதனால் அந்த பேருந்தின் ஓட்டுனருடன் தனபாலுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இருந்தாலும் வேறு ஒரு இடத்தில் அவரை இறக்கிவிட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது.

தான் பயணம் செய்தது வேறு மாநில அரசு பேருந்து என்பது கூட தெரியாமல், முழு போதையில் நேராக தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வந்த ஓட்டுனர் தனபால், தான் ஒரு அரசு பேருந்து ஓட்டுனர் என தெரிந்தும் நமது பணிமனையில் இறக்கி விடாதது ஏன் ? என்று கேட்டு அங்கிருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

தன்னை இறக்கி விட மாட்டேன் என்ற ஓட்டுனர் வரும்வரை இங்கிருந்து அசைய மாட்டேன் என்று கூறிய அவர், தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சட்டையை கழற்றி போட்டு படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை சக ஊழியர்கள் , இறக்கிவிட மறுத்தது புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பேருந்து என்று எடுத்து கூறி சமாதானம் செய்ய முயன்றனர் , அவர் எதற்கும் கட்டுப்படாத வெட்டுபுலியாக ரகளை செய்ததால், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் காவல்துறையினர் வந்து விசாரித்த போதும் தனபால் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார்

குடிகார ஓட்டுனர் தனபால் தற்காலிக பணி நீக்கத்தில் இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்த நிலையில் அவரை எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments