வீட்டில் பூச்சு வேலை... தாய்- மகளைக் கொன்ற கொலைகார கொத்தனார்கள்..!
கட்டிட வேலைக்கு செல்வது போல வீட்டை நோட்டமிட்டு, நகைகளைக் கொள்ளையடித்து விட்டு தாய் மகளை கொலை செய்து எரித்த கொடூர சம்பவம் ராமேஸ்வரம் அருகே அரங்கேறியுள்ளது. இலங்கையில் இருந்து வந்து குடியேறிய கொலைகார கொத்தனார்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் காளியம்மாள், இவர் தனது மகள் மணிமேகலையுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 6 ந்தேதி நள்ளிரவு அந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த காளியம்மாள், மணிமேகலை ஆகியோரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டு பீரோவில் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த அந்த கும்பல் தடயங்களை அழிக்கும் விதமாக இருவரது சடலங்களையும் தீவைத்து எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
வீடு முழுவதும் தீக்கிரையாகி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காளியம்மாளும், மணிமேகலையும் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்த நிலையில், மண்டபம் முகாமில் வசித்து வரும் இலங்கை அகதி ஒருவர், போலீசாரை சந்தித்து, தன்னுடன் 20 நாட்களுக்கு முன்பு காளியம்மாளின் வீட்டிற்கு தரை தள சிமெண்டு பூச்சு வேலைக்கு கொத்தனாராக வந்து சென்ற மூன்று பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் புதுக்கோட்டை அகதிகள் முகாமை சேர்ந்த சசிகுமார், குளித்தலை அகதிகள் முகாமை சேர்ந்த சம்பூர்ணலிங்கம் ஆகியரை இருவரை பிடித்து விசாரித்த போது காளியம்மாள் - மணிமேகலை கொலை சம்பவத்தின் பின்னணி அமபல்மானது. காளியம்மாள் வீட்டிற்கு கொத்தனார் வேலைக்கு வந்த போது வீட்டில் தாயும் மகளும் தனியாக இருப்பதையும் அவர்கள் கழுத்தில் நகைகள் அணிந்திருப்பதையும் நோட்டமிட்டுள்ளனர். ஆண்கள் துணையில்லாமல் தனியாக வசிப்பதால் அவர்களிடம் இருந்து நகை பணம் கொள்ளையடிக்கும் நோக்கில் இன்னோரு கூட்டாளியான நிஷாந்தனை அழைத்துக் கொண்டு சம்பவத்தன்று நள்ளிரவில் வீடுபுகுந்து பீரோவை திறந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அபோது காளியம்மாள் அவர்களை பார்த்து விட்டதால் , போலீசில் காட்டி கொடுத்து விடக்கூடாது என்று பயந்து அவரையும் அவரது மகள் மணிமேகலையும் அரிவாளால் வெட்டியும், இரும்புராடால் அடித்தும் கொலை செய்துள்ளனர். தடயங்களை அழிக்க இருவரது உடலிலும் தீயை பற்ற வைத்ததாகவும், பின்னர் அங்கு கொள்ளையடித்த நகைப்பணத்துடன் தப்பியதாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் தொடர்புடைய நிஷாந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டுக்குள் அறிமுகம் இல்லா நபர்களை கொத்தனார் மற்றும் வீட்டு வேலைகளுக்கு அனுமதிக்கும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் பெரும்பாலும் முன் பின் அறிமுகம் இல்லா நபர்களை அழைத்து வேலைவாங்குவதை தனிமையில் இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments