குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டதாக தகவல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லிக்கு அனுப்பி ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர் அருகே விபத்துக்குள்ளான MI 17 V5 ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை அதிகாரிகள் காலையில் இருந்து தீவிரமாக தேடி வந்தனர். விபத்து நிகழ்ந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடத்திய 3 மணி நேர தேடுதலில், கடைசியாக சிக்னல் மூலம் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் அல்லது ஹெலிகாப்டரில் இருக்கும் கருப்பு பெட்டியில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் ஒன்று வரும். விபத்து நடந்ததில் இருந்து 30நாட்கள் வரை இந்த சிக்னல் வரும் எனக் கூறப்படுகிறது. இந்த சிக்னலை வைத்து தான், கருப்பு பெட்டி எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து வந்த விமானப் படையின் விங் கமாண்டர் Bhardwaj தலைமையிலான 25 பேர் கொண்ட சிறப்புக் குழு இந்த கருப்பு பெட்டியை நஞ்சப்பசத்திரம் பகுதியில் கண்டு பிடித்துள்ளது. கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி பெங்களூர் அல்லது டெல்லி கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பு பெட்டியில் CVR என்று சொல்லக்கூடிய Cockpit Voice recorder என்ற ஒரு பகுதியும், FDR என்று சொல்லக்கூடிய Flight Data Recorder-ம் என்ற ஒரு பகுதியும் என இரண்டு பகுதிகள் இருக்கிறது. இதில், Cockpit Voice recorder பகுதி, கட்டுப்பாட்டு அறையுடனான விமானியின் பேச்சுகளை பதிவு செய்யும், கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையை விமானி தொடர்பு கொண்டாரா? விபத்து நிகழும் போது விமானி பேசியது என்னென்ன உள்ளிட்ட விபரங்கள் பதிவாகும்.
இந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. மற்றொரு பகுதியான Flight Data Recorder ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தது, ஹெலிகாப்டர் பறந்து சென்ற போது இருந்த காற்றழுத்தத்தின் அளவு என்ன? போன்ற தரவுகளை பதிவு செய்து வைத்திருக்கும்.
அத்தோடு, ஹெலிகாப்டரில் ஒருவேளை ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தாலும், எந்த பாகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்ட 400 வகையான தரவுகள் கருப்பு பெட்டியின் FDR-ல் பதிவாகும் எனக் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரோ, விமானமோ விபத்துக்குள்ளாகி, முற்றிலும் தீப்பிடித்து எரிந்தாலும், கருப்பு பெட்டியில் தீப்பிடிக்காது. அதேபோல், விமானத்தின் வால் பகுதியில் தான் கருப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு பெட்டி ஸ்டீல் அல்லது அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.
Comments