பிபின் ராவத் மறைவை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை..
ராணுவ ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பதை அறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், 63 வயதான முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணம் என்ன, எவ்வாறு விபத்து நிகழ்ந்தது என்பதை அறிய உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்த நிலையில், நாளை நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து அவர் அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலாசீதாராமன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக டெல்லியில் பிபின் ராவத் வீட்டிற்கு சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ தளபதி நரவானே ஆகியோர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Comments