நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்த அதிகாரிகளில் ஒருவர் கூடத் தண்டனையில் இருந்து தப்ப முடியாது - உயர்நீதிமன்றம்.!
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்த அதிகாரிகளில் ஒருவர் கூடத் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளின் தோல்வியை இது காட்டுவதாகத் தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டே நீதிமன்றம் உத்தரவிட்டு ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டாலும் அவற்றை அகற்றி நீர்நிலைகளை ஏன் முழுமையாக மீட்க முடியவில்லை? என வினவினர்.
ஆட்சியர்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்துக் கேட்பதில் தலைமைச் செயலாளருக்கு என்ன பிரச்சனை? என்றும் வினவினர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப் பல முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டு விட்டதாகவும், மேற்கொண்டு கால நீட்டிப்பு வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் செய்யும் தவறுக்காக மழைக் காலங்களில் மக்கள் பாதிப்படைவதாகத் தெரிவித்த நீதிபதிகள், தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
Comments