தலைமை தளபதி மறைவு.. தலைவர்கள் இரங்கல்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் அவரது மனைவி மதுலிக்கா ராவத்தும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒரு துணிச்சலான மகனை இந்த தேசம் இழந்துவிட்டதாகவும், 40 வருடங்களாக பிபின் ராவத் தாய்நாட்டுக்கு புரிந்த சேவை குறிப்பிடத்தகுந்தவை எனவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பிபின் ராவத்தின் சேவையை இந்திய தேசம் ஒருபோதும் மறக்காது எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் பிபின் ராவத் சிறப்பாக பணியாற்றினார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத்தும், அவரது மனைவியும் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பெரும் பங்களித்த பிபின் ராவத்தின் சேவை என்னென்றும் நினைவுகூரப்படும் எனக் கூறியுள்ளார்.
பிபின் ராவத்தின் மறைவு, நாட்டுக்கும், ராணுவத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார். முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத், நாட்டுக்காக தைரியத்துடனும், விடாமுயற்சியுடனும் சேவையாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேரின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமானி வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை இழந்த இந்த நாள் நாட்டுக்கே மிகவும் துக்கமான நாள் எனவும், நாட்டுக்கான பிபின் ராவத்தின் பங்களிப்புகளையும், அர்ப்பணிகளையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனவும் அமித்ஷா வேதனை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது டுவிட்டர் பதிவில், “இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பில் தேசத்துடன் இணைந்து இரங்கல் தெரிவிப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
“ துணிச்சலான ராணுவ வீரர், திறன் வாய்ந்த முப்படைகளின் தளபதியான பிபின் ராவத் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தளபதி பிபின் இராவத், அவர்தம் மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Comments