எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் சிறப்பு இயல்புகள்..
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17வி5 வகையை சேர்ந்ததாகும். ரஷ்ய தயாரிப்பான அந்த ஹெலிகாப்டர் குறித்த செய்தி தொகுப்பு.
உலகளவில் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றான எம்ஐ-17வி5 ரகத்தில் 80 ஹெலிகாப்டர்களை வாங்க 2008ஆம் ஆண்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், 2011ஆம் ஆண்டு முதல் விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கப்படுகின்றன. இதனை அடுத்து 2013ஆம் ஆண்டில் 36 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டன.
இந்த ஹெலிகாப்டர்கள் ரஷ்யன் ஹெலிகாப்டர்சின் துணை நிறுவனமான கசன் (Kazan) ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். உயரதிகாரிகள் அமர்ந்து செல்ல தனிப்பகுதியும் அதற்கு வெளியே பாதுகாப்பு கலனையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட இந்த வகை ஹெலிகாப்டர்கள், வீரர்கள், ஆயுத போக்குவரத்து, தீயணைப்புப் பணி, பாதுகாப்பு, தேடுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் பல நவீன வசதிகள் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் விமானி இருக்கும் காக்பிட் பகுதி குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதுடன், போம் பாலியுரேதேன் (foam polyurethane) எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். ஆதலால், ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரியளவில் விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். மேலும் பாராசூட் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் கொண்ட அந்த ஹெலிகாப்டர், அவசர காலத்தில் தண்ணீரில் தரையிறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
13 ஆயிரம் கிலோ அளவுக்கு சுமந்துகொண்டு பறக்கும் திறன்கொண்டது இந்த ரக ஹெலிகாப்டரில் 36 வீரர்கள் வரை பயணிக்கலாம். மேலும், இந்த எம்ஐ-17வி-5 ஹெலிகாப்டரில் உள்ள ஷட்டர்ம் வி ரக ஏவுகணைகள் (Shturm-V missiles), எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23 எம்எம் எந்திரத் துப்பாக்கிகள், பிகேடி (PKT) எந்திர துப்பாக்கி மூலம் எதிரிகளை எளிதில் தாக்க முடியும்.
மேலும், பல நவீன வசதிகள் கொண்ட அந்த ஹெலிகாப்டர் 6,000 மீட்டர் உயரம் வரையும், தொடர்ந்து 1,065 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்கும் திறனுடையது. மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் அந்த ஹெலிகாப்டர் 2,700 குதிரை சக்தி கொண்டதாகும்.
Comments