ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கிய நிலையில், விபத்து நிகழ்ந்ததை நேரில் பார்த்தவர்கள் விவரிப்பதை பார்க்கலாம்...
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேருடன் கோவை சூலூர் விமானப் படை தளத்திற்கு திரும்பிய ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில், ஹெலிகாப்டர் மேலிருந்து கீழே விழும் போதே, சாய்வான நிலையிலும், தீப்பற்றிய நிலையிலும் இருந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த கிருஷ்ணசாமி என்ற முதியவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் கீழே விழுந்த சிறிது நேரத்தில் சென்று பார்த்த போது, உள்ளே இருந்தவர்கள் எரிந்த நிலையில் இருந்ததாகவும், அதில் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கைகளை தூக்கி கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த யோகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் தாழ்வான உயரத்திலேயே பறந்து சென்றதாகவும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதுடன் பொதுமக்களும் சென்று வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்க முயன்றதாகவும் பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் சென்ற நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதாக சந்திரசேகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
Comments