முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் வாழ்க்கை குறிப்பு!

0 10988

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் சீரிய பணிக்காக 18 பதக்கங்களை பெற்றவர். ராணுவ அதிகாரியாக பணியை தொடங்கி முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக உயர்ந்தவர். 

பிபின் ராவத் 1958 மார்ச் 16ஆம் நாள் உத்தரக்கண்ட் மாநிலம் பவுரியில் பிறந்தார். அவர் தந்தை லட்சுமண் சிங் ராவத் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர். அவர் முன்னோர் பல தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றினர்.

டேராடூன், சிம்லா ஆகிய நகரங்களில் பள்ளிப் படிப்பை முடித்த பிபின் ராவத், புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமி, டேராடூனில் உள்ள ராணுவ அகாடமி ஆகியவற்றில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார்.

படிப்பில் சிறப்பிடம் பெற்றதற்காக வீரவாள் பரிசு பெற்றவர். குன்னூர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கான பயிற்சிக் கல்லூரியில் பாதுகாப்புத் தொடர்பான கல்வியில் எம்பில் பட்டம் பெற்றவர்.

மீரட் சரண் சிங் பல்கலைக்கழகத்தில் ராணுவ ஊடகத் தந்திரம் தொடர்பான ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். 1978ஆம் ஆண்டு கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவில் ராணுவ அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். உயரமான மலைப் பகுதிகளில் போர் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்.

ஜம்மு காஷ்மீரின் ஊரியில் ஒரு படையணிக்குத் தலைவராக இருந்தார். 1987ஆம் ஆண்டு சீனாவுடன் மோதல் ஏற்பட்டபோது சீனப்படையை எதிர்கொள்ள பிபின் ராவத்தின் தலைமையில் இந்தியப் படைப் பிரிவு அனுப்பப்பட்டது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் படையிலும் அதிகாரியாகப் பணியாற்றினார். 2017 முதல் 2019 வரை மூன்றாண்டுகள் ராணுவத் தளபதியாக இருந்தார்.

முதன்முறையாக முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்ட பின் 2020 ஜனவரி முதல் அப்பதவியில் இருந்து வந்தார். ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகப் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர்.

ராணுவத் தளபதியாகப் பதவியில் இருந்த காலத்தில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் கசக்கஸ்தான், ரஷ்யா, வியட்நாம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளின் பாதுகாப்புத் துறையினருடன் பேச்சு நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments