கார் நிறைய பணம்..! மங்காத்தா சினிமா பாணியில் சேசிங்..! விரட்டிப்பிடித்த போலீஸ்..!
பட்டுப்புடவை வியாபாரியிடம் போலீஸ் உடையில் சென்று ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற கொள்ளையர்கள் கார் நிறைய 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களுடன் போலீசில் சிக்கினர். மங்காத்தா படம் போல வாகனத்துடன் ஆட்டம் காட்டிய கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த பரபரப்பான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பட்டுபுடவை வியாபாரி கனகராஜ். சம்பவத்தன்று காரில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் சென்ற போது, அவரது காரை பின்தொடர்ந்து ஸ்கோடா காரில் சென்றவர்கள் கனராஜின் காரை மறித்துள்ளனர். அந்த காரில் இருந்து போலீஸ் போல காக்கிச் சீருடை அணிந்த சிலர் இறங்கி கனகராஜிடம் விசாரிப்பது போல நடித்து , அவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கோடா கார் ஒன்று போலீசாருக்கு போக்கு காட்டி விட்டு நிற்காமல் தப்பி சென்றது. அந்த காரை சினிமா பாணியில் துரத்தி சென்று காவல்துறையினர் பிடிக்க முயன்றனர்.
இடையில் கார் மீது கல்லை தூக்கி வீசி நிறுத்த முயற்சி மேற்கொண்ட நிலையில் ஸ்கோடாகாரை ஓட்டியவர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிவேகமாக ஓட்டிச்சென்றனர்.
மாதனூர் அருகே சென்றபோது சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி ஸ்கோடா கார் விபத்துக்குள்ளானது பின்தொடர்ந்து சென்ற போலீசார் விரைவாக சுற்றி வளைத்து காரில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர். காரில் இரண்டு பெரிய அளவிலான பைகளில் கட்டுகட்டாக இருந்த 25 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் போலியான ரூபாய் நோட்டுக்கள் என்பதும் ஒரு லட்சம் ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறி போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மக்களை ஏமாற்றும் மோசடிக் கும்பல் என்பதும் தெரியவந்தது. அந்த கள்ள நோட்டு கும்பலின் ஸ்கோடா காருக்கு பாதுகாப்பாக வந்த மற்றொரு செவர்லெட் காரையும் மடக்கிய போலீசார் அதில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த கும்பல் பலரிடம் இரு மடங்கு பணம் தருவதாகவும், சிலரிடம் தங்களை போலீஸ் எனக்கூறியும் மோசடி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதால் விரிவான விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments