டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தை இன்று வாபஸ் பெற விவசாயிகள் முடிவு?

0 3473

ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவரும் விவசாயிகள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் 5 கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதால், விவசாயிகள் வீடு திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட சங்கங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. டெல்லி அடுத்த சிங்கு எல்லையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் விவசாயிகள், பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலை, வழக்குகள் வாபஸ், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மின்சார சட்டத் திருத்த மசோதாவை விவசாயிகள் ஆலோசனை இல்லாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது, பதர்களை எரிப்பதை கிரிமினல் குற்றப்பிரிவில் சேர்க்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் நேற்று விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அமைச்சர் அமித் ஷா விவசாயிகளுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழியில், அடிப்படை விலையை நிர்ணயிக்க விவசாயிகள் அடங்கிய குழு அமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உறுதிமொழியை அடுத்து நேற்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூடி சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இன்றும் இறுதி முடிவு எடுக்க விவசாயிகள் கூடுகின்றனர். இன்று பிற்பகலுக்குள் போராட்டத்தைக் கைவிட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments