மாணவர் உயிரிழந்த சம்பவம்... மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு... அடுத்தடுத்து திருப்பங்கள்

0 5176

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே போலீசார் தாக்கியதால் கல்லூரி மாணவன் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில், மாணவரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதில் திடீர் திருப்பமாக சம்பவத்தன்று உயிரிழந்த மாணவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆனைசேரியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர், கடந்த சனிக்கிழமை வாகன சோதனையின்போது ஒத்துழைக்கவில்லை என கீழத்தூவல் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். 

விசாரணை முடிந்து வீடு திரும்பிய மணிகண்டன் சில மணி நேரம் கழித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியவாறு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. போலீசார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என மணிகண்டனின் உறவினர்கள் குற்றம்சாட்டும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டனர்.

அதில் மணிகண்டன் காவல் நிலையத்துக்குள் வருவதும் விசாரணைக்குப் பின் சகஜமாக தனது தாயுடன் செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிசிடிவி விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத மணிகண்டனின் உறவினர்கள், அவரது உடலை பெற்றுக்கொள்ளாமல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மணிகண்டனின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மணிகண்டனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் மறு உடற்கூராய்வு செய்தவுடன் உடலை பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் உறுதி வழங்க வேண்டும் என்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து, இடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வரை உடலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே வழக்கில் புதிய திருப்பமாக, சம்பவத்தன்று மணிகண்டன் ஓட்டி வந்த பல்சர் வாகனம் மதுரையில் திருடுபோன வாகனம் என்றும் வாகனத்தின் பதிவு எண்ணில் சிறிது மாற்றம் செய்து அவர் ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மதுரை மேலூர் காவல் நிலையத்தில் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மறு உடற்கூராய்வு அறிக்கை வந்தபிறகே, போலீசார் சொல்வது உண்மையா, மணிகண்டனின் உறவினர் தரப்பில் கூறப்படுவது உண்மையா என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments