தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறையினரின் காரை வழிமறித்த கைதியின் ஆதரவாளர்கள், போலீசாரை தாக்கிவிட்டு அவனது கை விலங்கை தகர்த்து தப்பிக்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கணேஷ். கணேஷின் மனைவி சுனிதா, அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளார். இந்த நிலையில் காலை கணேஷ் வீட்டுக்கு வந்த கோவை குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார், அவர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி கைவிலங்கு போட்டு கைது செய்து காரில் அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அப்போது அங்கு ஒன்று கூடிய கணேஷின் ஆதரவாளர்கள், அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.கடந்த அக்டோபர் மாதம் கோவையில் தங்கி இருந்த கணேஷ், அதிகாரி போல் வேடமிட்டுச் சென்று பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி, போலீசார் சில சிசிடிவி காட்சிப் பதிவுகளை காண்பித்தனர்.
போலீசார் காண்பித்த சிசிடிவி பதிவுகளை ஏற்றுக்கொள்ளாத கணேஷின் ஆதரவாளர்கள், போலீசாரிடமிருந்து அவரை மீட்பதிலேயே குறியாக இருந்தனர். கணேஷ் அழைத்துச் செல்லப்பட்ட காரை கும்பலாகச் சூழ்ந்துகொண்டு தொடர்ந்து அவர்கள் ரகளை செய்தனர்.
ஒரு கட்டத்தில் போலீசாரின் பிடியிலிருந்து கணேஷை மீட்ட அவரது ஆதரவாளர்கள், அருகிலிருந்த வெல்டிங் பட்டறைக்கு அழைத்துச் சென்று அவரது கைவிலங்கை தகர்த்துள்ளனர் . பல மணி நேரம் அவர்களோடு போராடிய போலீசார், பின் அங்கிருந்து சென்றுவிட்டனர். அங்கு நடைபெற்ற களேபரத்தில் காயமடைந்த 2 போலீசார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து உள்ளூர் போலீசாரை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து பார்த்தபோது, கணேஷ் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கணேஷ், போலீசார் அவ்வப்போது தன்னைப் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்துக் கொண்டு 5 லட்ச ரூபாய், 10 லட்சம் கொடு என குடும்பத்தினரை மிரட்டிப் பணம் பறிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கணேஷைப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கணேஷின் கைவிலங்கை அகற்றிய வெல்டிங் பட்டறை உரிமையாளர் சுரேஷ் என்பவரை கைது செய்துள்ள போலீசார், கணேஷை அழைத்து வரும்போது, காரைச் சூழ்ந்துகொண்டு வாக்குவாதம் செய்தவர்கள், காவலர்களைத் தாக்கியவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.
ஆனால் கணேஷ் மீது கோவையில் மட்டுமின்றி மேலும் சில மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் திருட்டு, நகை மோசடி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Comments