இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு: விமான நிலையங்களில் தீவிர சோதனை!
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய 21 பேருக்கு இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தானில் ஒமிக்ரான் உறுதியானவர்களில் 4 பேர் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு சுமார் 38 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த நிலையில், ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகின்றனர்.
இதனை அடுத்து தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்தமாக இந்தியாவில் 20க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 4 பேர் நகரில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த 4 பேரும் கடந்த மாதம் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனர் என்றும் கடந்த 29ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த திருமண விழாவில் அவர்கள் கலந்துகொண்டதாக அம்மாநில சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறையினர், அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 9 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 சதவீதம், தெலங்கானாவில் 26 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், அதேபோல் டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், கோவா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments