பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

0 6423

 

தஞ்சாவூரில் கழிவறைக்குள் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், பெற்ற தாயே குழந்தையை பிளஷ் டேங்கில் அமுக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை கொலை செய்ததாக அந்த கொடூரத் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். 

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படாத வெஸ்டர்ன் டைப் கழிவறை ஒன்று இருந்துள்ளது. 2 நாட்களுக்கு முன் அந்த கழிவறையை தூய்மை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்ய சென்ற போது, பிளஷ் டேங்கில் தொப்புள் கொடி கூட அறுக்காமல் பெண் சிசு சடலமாக கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு இல்லாத நிலையில், வேறு எங்காவது பிறந்த குழந்தையை இங்கு வந்து போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடந்தது. மருத்துவமனைக்கு வந்து சென்றவர்கள் குறித்து, பதிவேடு மூலமும், சிசிடிவி காட்சிகள் மூலமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் குழந்தை பிறந்த நேரத்தை சரியாக கணிக்க முடியாததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில் தான், அங்குள்ள செவிலியர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் ஒருவரை பார்த்ததாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். பயன்படுத்தப்படாத அந்த கழிவறைக்குள் அந்த பெண் சென்று வந்ததை தாம் பார்த்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், செவிலியர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அவசர சிகிச்சை பிரிவு வளாகத்திலுள்ள சிசிடிவியில் அந்த பெண் வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

விசாரணையில், அந்த பெண் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியை சேர்ந்த, பன்னீர்செல்வத்தின் மகள் 23வயதான பிரியதர்ஷினி என்பது தெரியவந்தது. திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை கொலை செய்ததாக கொடூரத் தாயான பிரியதர்ஷினி ஒப்புக் கொண்டிருக்கிறார். கருவுற்றது தெரிய வந்தததும், பிரியதர்ஷினி அதனை கலைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், வெகு நாட்கள் ஆகிவிட்டதால், கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறவே, பெற்றோர் உதவியுடன் ஊராருக்கு தெரியாமலேயே இருந்து வந்துள்ளார் பிரியதர்ஷினி.

இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி சம்பவத்தன்று, வயிற்றுவலி எனக் கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பிரியதர்ஷினியை, உள்நோயாளிகள் பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் அவரை முறையாக பரிசோதிக்காமலேயே விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சாதகமாக்கிக் கொண்ட பிரியதர்ஷனி, பிரசவ வலி வந்ததும் யாருக்கும் தெரியாமல் அந்த பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் சென்று குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, பிளஷ் டேங்கில் போட்டு அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. கழிவறைக்குள் செல்லும் போது, நல்லவள் போல் சென்ற பிரியதர்ஷினி, வெளியே வரும் போது அலங்கோலமாக ஆடையில் ரத்தக் கரையுடன் வந்த காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, பிரியதர்ஷினியை கைது செய்த போலீசார், குழந்தையை கொலை செய்ய உடந்தையாக இருந்த பிரியதர்ஷினியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments