இன்று டெல்லி வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்… பிரதமர் மோடியுடன் மாலையில் பேச்சுவார்த்தை!
டெல்லி வரும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், இன்று பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன
ஒருநாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். இன்று மாலை புதினும் பிரதமர் மோடியும் டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் சந்தித்துப் பேசுகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில், ஆப்கான் தாலிபன் ஆட்சி, சீனாவின் எல்லை ஆக்ரமிப்பு உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை இருதலைவர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து எரிசக்தி, கலாச்சாரம், பாதுகாப்பு, முதலீடு தொடர்பாக 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டு பிரதிநிதிகளுடன் பேசுவதுடன், மோடியும் புதினும் தனித்துப் பேசுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிடமிருந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியா ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கிகளை வாங்க உள்ளது. ஏற்கனவே எஸ்.400 மாடல் ஏவுகணை சாதனங்களை ரஷ்யாவிடம் வாங்க உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் . ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கோய் லாவரோவ் நேற்றிரவு டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இன்று அவர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார்.
Comments