கோவில்பட்டி அருகே சாலையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால், இருசக்கர வாகனங்களை கம்பி கட்டித் தூக்கிச் செல்லும் மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால், இருசக்கர வாகனங்களை கம்பி கட்டித் தூக்கிச் செல்லும் நிலை உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இலுப்பையூரணி - கணபதிபட்டி சாலையில் உள்ள நீராவி குளம் தொடர் மழையினால் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.
நீர் செல்லும் கால்வாயை கடந்து செல்லும் சாலையை 3 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பால், காய்கறி உள்ளிட்டவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனங்களை கம்பி கட்டி தூக்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் சிறிய அளவிலான மேம்பாலம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையில் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீர்
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. புதுக்குளம் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பால் பெரியசாமி நகர் பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிநிற்பதோடு, இன்று விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் அதில் ஆட்டம் போட்டு வருகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Comments