சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை

0 11590
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா

முதலில் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்டு, 2 வதாக இரு வீட்டார் சம்மதத்துடன் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் குடும்பத்தினருடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக கூறி அவரது வீட்டின் முன்பு அமர்ந்து காதல் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது விட்டல் நாயக்கன்பட்டி. இப்பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் பயின்ற மதுரையை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அலைபாயுதே சினிமா பாணியில் இருவரும் அவரவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர் இந்நிலையில் ஜீவா வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது மகளுக்கு பதிவு திருமணம் நடந்தது தெரிய வந்தது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் மாப்பிள்ளை வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் இரண்டு வீட்டாரும் பேசி முறைப்படி பெரியோர்கள், உறவினர்களையும் அழைத்து திருமணம் நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே வீரக்குமார் தாயார் தமிழ்செல்வி, அக்கா உமா மகேஸ்வரி ஆகியோர் இந்த காதல் திருமண தம்பதியை பிரித்து வைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. ஜீவாவிடம் வரதட்சனை கேட்டுகொடுமை படுத்தியதாக கடந்த ஆண்டு வடமதுரை காவல் நிலையத்தில் பெண் வீட்டார் சார்பில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வீரக்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனவும், இதற்கு மாமியார் தமிழ்செல்வி இடையூறு செய்ய கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வீரக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் ஊர் சுற்றும் தகவல் மனைவி ஜீவாவுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஜீவாவை அவரது தாய் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார் வீரக்குமார்.

நீண்ட நாட்களாக ஜீவா தாய் வீட்டிலேயே இருந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் வீரக்குமாரிடம் சமரசம் பேசியதன் பேரில் 4 ந்தேதி வீட்டிற்கு வரும் படி தனது மனைவியை அழைத்தார். விட்டல் நாயக்கன்பட்டியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற அந்தப்பெண்ணை மாமியார், கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு கதவை அடைத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவா தனது கணவருடன் சேர்ந்து வாழ இடையூறாக உள்ள மாமியார் தமிழ்செல்வி, நாத்தனார் உமாமகேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி கொண்டிருந்த போது கணவர் வீரக்குமாரும் அவரது தாயார் தமிழ்செல்வியும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர்.

காதல் ஜோடி இருவரும், இரு வீட்டார் சம்மதத்துடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் வீரக்குமாரின் வீட்டில் உள்ளவர்கள் தினமும் தனது சாதியைச்சொல்லி தன்னை இழிவுப்படுத்துவதாகவும் வேதனை தெரிவிக்கிறார் ஜீவா.

 படிக்கின்ற காலத்தில் தோன்றுகிற இனக்கவர்ச்சியால், காதலில் விழுந்து, அவசர அவசரமாக திருமணத்தில் இணைந்த ஜீவா, தற்போது வாழ்க்கையை தொலைத்து வீதியில் கண்ணீருடன் தவிக்கும் பரிதாப நிலைக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments