இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு.. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை..!

0 6735
இந்தியாவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு.. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை..!

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புடையவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில் மும்பை, டெல்லி பெங்களூர் சென்னை உள்பட அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் வெளிநாட்டுப் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெங்களூர் வந்திருந்த தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 66 வயதான நபரிடம் முதன்முதலாக கொரோனாவின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த நபர் நெகட்டிவ் சான்றுடன் துபாய்க்குத் சென்று விட்ட நிலையில் பெங்களூரில் பயணம் ஏதும் மேற்கொள்ளாத மருத்துவர் ஒருவரிடம் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் குணமாகிவிட்டதாகவும் கர்நாடக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் குஜராத்தின் ஜாம்நகரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 72 வயதுடைய ஒருவருக்கும் மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கல்யாண் பகுதிக்கு வந்த அந்த நபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி, மும்பை, உள்பட பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளின் மாதிரிகள் ஒமிக்ரான் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துபாயில் இருந்து வந்த 40 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒமிக்ரான் பாதிப்புகள் மிதமான அளவிலேயே இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் நேரிடவில்லை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 38 நாடுகளுக்கு ஒமிக்ரான் பரவியுள்ள போதும் இதுவரை ஒருவரும் உயிரிழக்கவில்லை.

இந்நிலையில் மும்பை சர்வதேச விமானநிலையத்தில் ஒமிக்ரான் பாதிப்புடையவர்களைக் கண்டறியவும் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனை கொண்டு செல்லவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா உள்பட ரிஸ்க் உள்ள 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்த தனிப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதே போல் டெல்லி, சென்னை, பெங்களூர் விமான நிலையங்களிலும் பரிசோதனைகள் தீவிரம் அடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments