ஊழல் வழக்கில் சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் விசாரணைக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல்..
ஊழல் வழக்கில் சிக்கிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், விசாரணைக்கு அஞ்சி அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
வெங்கடாசலத்திற்கு அரசியல் பிரமுகர்களின் தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், வெளிநபர்கள் அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்தாரா? தற்கொலைக்கு முன் யாரிடமும் பேசியுள்ளாரா என செல்போன் உரையாடல்களை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
இந்த நிலையில், வெங்கடாசலத்தை நேற்று தொடர்புகொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருக்கின்றனர். பகல் 12 மணியளவில் தனது அறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வெங்கடாசலம் அதற்கு பிறகு அறையை விட்டு வெளியேவரவில்லை.
இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரது மனைவியை தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும், செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை எனவும் கேட்டிருக்கின்றனர்.
அதற்கு பிறகு தான் வெங்கடாசலத்தின் மனைவிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அழைத்த விஷயமே தெரியவந்திருக்கிறது. உடனடியாக, அவரது அறையின் கதவை உடைத்து பார்த்த போது, வெங்கடாசலம் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்துள்ளார்.
Comments