கைதியை சமாளிக்க செருப்பு வாங்கி கொடுத்த போலீசார்..! ஜெயிலுக்கு செல்ல மறுத்து அடம்

0 4333

பொள்ளாச்சியில் பெண்ணை வீடுபுகுந்து மிரட்டியதாக கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், தன் மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதாக கூறி ஜெயிலுக்கு செல்ல மறுத்து அடம் பிடித்தார். செருப்பு வாங்கித்தந்தால் தான் நடப்பேன் என்று அடம்பிடித்தவருக்கு புத்தம் புதிய செருப்பு வாங்கிக் கொடுத்து போலீசார் சிறைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது..

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அருண் பிரசாத், கோமங்கலம்புதூர் அதிமுக கிளைச் செயலாளர் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து அதிமுக நிர்வாகியின் மனைவி கோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அருண் பிரசாத் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது ஒத்துழைப்பு வழங்காமல் போலீசாரிடம் வம்பிழுத்த அருண் பிரசாத், தன்னால் நடக்க இயலாது என போக்குக் காட்டியும், தனக்கு புதிய செருப்பு வாங்கித்தந்தால் தான் வருவேன் என்றும் அடம்பிடித்தபடி நடுவழியில் நின்றார்

நீதிமன்ற வாசலில் உட்கார்ந்து கொண்டு அடம் பிடித்த அருண்பிரசாத்துக்கு, போலீசார் புதிய செருப்பு வாங்கிவந்து கொடுத்தனர்.

பின்னர் போலீசாரிடம் என் மீது பொய் வழக்கு தானே போட்டுள்ளீர்கள் என்று கேட்டதோடு, தன்னை கைது செய்ய யாருக்கும் உரிமை இல்லை, ஆட்சியர் வர வேண்டும் போன்ற சினிமா பாணியில் வசனங்கள் பேசி போலீசாருக்கு தலைவலியாக மாறினார்.

பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, பள்ளிசெல்ல அடம்பிடிக்கும் குழந்தையை சமாதானபடுத்தி அழைத்துச்செல்லும் பெற்றோர் போல, பக்குவமாக பேசிய போலீசார் அருண் பிரசாத்தை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர், சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் அருண் பிரசாத் அடாவடியில் ஈடுபட்டு வந்தார்.

பின்னர் நீண்ட நேரம் பொறுமை காத்த போலீசார் தங்களின் நிலைமையை எடுத்து கூறி அருண்பிரசாத்தை 15 நாள் காவலில் பொள்ளாச்சி கிளைச்சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments