காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து... அடித்து நொறுக்கி தீவைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!
விழுப்புரம்-புதுச்சேரி கூட்டுச்சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, ஆட்டோ மீது மோதியதால், தூக்கிவீசப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பலியானார். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் தனியார் பேருந்தை அடித்து நொறுக்கித் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி போல மக்கள் உக்கிரமாகி, தனியார் பேருந்து ஒன்றை அடித்து நொறுக்கிச் சல்லடையாகக்கும் இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் விழுப்புரம் - புதுச்சேரி கூட்டுச்சாலையில் அமைந்துள்ள பாணாம்பட்டு..!
புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பலர், தங்கள் பேருந்தை ஃபிளைட் என்ற நினைப்பில் அதிவேகமாக இயக்கி வருகின்றனர். அந்தவகையில் வியாழக்கிழமை மாலை அதிவேகமாகச் சென்ற டாக்டர் கல்பனா என்ற தனியார் பேருந்து மெதுவாகச் சென்ற ஆட்டோ மீது போதியதில், ஆட்டோவுடன் தூக்கிவீசப்பட்ட ஓட்டுனர் அர்ச்சுனன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கிப் பலியானார்
ரேஸர் போலப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர், அந்தப் பேருந்தை அம்போவென சாலையில் விட்டுத் தப்பி ஓடிவிட்டார். இதனைக் கண்டு ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்கள் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து, கல்பனா பேருந்தை அடித்து உடைத்தும் கல்வீசித் தாக்கியும் சல்லி சல்லியாக நொறுக்கினர்
அருகே இரு காவல் நிலையங்கள் அமைந்திருந்தும், சம்பவ இடத்தில் சுற்றி நின்ற போலீசார், அவர்களைக் கட்டுப்படுத்த இயலாமல் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர்
ஒரு கட்டத்தில் அந்தப் பேருந்துக்கு சிலர் தீவைத்ததைப் பார்த்து கூடியிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். போலீசாரும் தீயை உடனடியாக அணைக்க முயற்சிக்காமல், ஆத்திரத்தில் இருந்தவர்களை அமைதிப்படுத்தி, அதன் பின்னர் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து பாதியளவு எரிந்த பேருந்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.
புதுச்சேரி - விழுப்புரம் மட்டுமல்ல, கோவை - திருப்பூர், அருப்புக்கோட்டை - மதுரை என தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தங்களை 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' நாயகன் வின் டீசல் போல நினைத்துக் கொண்டு அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து சாலையை பந்தய சாலையாக்கி விபத்துக்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது, மக்களுக்கு உள்ள ஆத்திரத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் இந்த தாக்குதல் சம்பவம் என்பதே கசப்பான உண்மை..!
Comments