பல இலட்சம் கனஅடி நீரைக் குடித்தும் நிறையாத கிணறு.. ஆராயும் ஐஐடி பேராசிரியர்கள்..!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் பல இலட்சம் கன அடி தண்ணீரைக் குடித்த பின்னும் நிரம்பாத அதிசயக் கிணறு குறித்துச் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வைத் தொடங்கினர். நம்பியாறு அணையில் இருந்து வரும் நீரால் ஆயன்குளம் படுகை நிரம்பி அதன் அருகே தேரிமணற் பகுதியில் உள்ள கிணற்றுக்கு நொடிக்கு 50 கன அடி நீர் நவம்பர் 27 முதல் தொடர்ந்து விடப்படுகிறது.
ஆறு நாட்களாக இதே அளவில் தண்ணீர் பாய்ந்தும் இந்தக் கிணறு நிரம்பாதது மட்டுமல்ல, நீர்மட்டம் அடியாழத்தில் தான் கிடக்கிறது. இந்த அதிசயக் கிணற்றைச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் முதல் பொதுமக்கள் வரை பார்த்துச் சென்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதன் முறையாக கிணற்றில் தண்ணீர் முழுமையாக நிரம்பிய நிலையில் இன்று மதியம் மீண்டும் தண்ணீர் கீழே இறங்கியது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்றுச் சென்னையில் இருந்து வந்த ஐஐடி பேராசிரியர்கள் மூவர் இந்த அதிசயக் கிணறு நிரம்பாத காரணம் குறித்தும், நீர் எங்கே செல்கிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் கிணற்று நீர் மற்ற கிணறுகளுக்கு ஊற்றுமூலம் செல்கிறதா என்பதை அறிய, அருகில் உள்ள கிணற்றின் நீரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதுடன் பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
Comments