துப்பறிவாளன் கண்களில் யாரும் தப்ப முடியாது... காவல்துறையின் நண்பன் ''மோப்ப நாய்''

0 4122
சென்னை எழும்பூரிலுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில், காவல்துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களை வைத்து நடத்தப்பட்ட சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சென்னை எழும்பூரிலுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில், காவல்துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களை வைத்து நடத்தப்பட்ட சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குற்றங்களை கண்டுபிடிப்பதில் காவல்துறையின் நண்பனாக செயல்பட்டு வரும் மோப்ப நாய்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

நாட்டில் நடக்கும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் காவல்துறைக்கு துப்பு கிடைக்க, உதவுவது மோப்ப நாய்கள் தான்....சென்னை காவல்துறையில் 30-க்கும் மேற்பட்ட மோப்ப நாய்கள், குற்றவாளிகளை பிடிக்கவும், குற்றப் புலனாய்வுக்கு உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.

லேபர் டாக், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், பெல்ஜியம் ஷெப்பர்ட் போன்ற வெளிநாட்டு வகை நாய்கள் மூன்று மாதக்குட்டியாக இருக்கும் போதிலிருந்தே பயிற்சி அளிக்கப்பட்டு குற்றப்பிரிவிலும், போதைப்பொருளை கண்டறியவும் மற்றும் வெடிப் பொருட்களை கண்டறியவும் தனித்தனியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை எழும்பூரிலுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் நடந்த கண்காட்சியில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் 5 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டன. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் முன்னிலையில் நடந்த இந்த கண்காட்சியில், பயிற்சியாளரின் சைகையின்படி நடந்துகொண்ட மோப்ப நாய்களின் சுட்டித்தனம் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

தடைகளை தாண்டி தாவி குதித்து சாகசத்தில் ஈடுபட்ட நாய்களை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர். பின்னர் மோப்ப நாய்களுடன் மாணவர்களும், ஆசிரியர்களும் கை குலுக்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்கள் கண்டு பிடிக்கும் விதம் குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. கண்காட்சிக்கு வந்திருந்த டோபர்மேன் வகை நாய்கள், குற்றச் செயலில் ஈடுபடும் நபர் பயன்படுத்திய வியர்வை படிந்த கைக்குட்டையை வைத்தோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களை குற்ற நிகழ்விடத்தில் விட்டு சென்றிருந்தால், அதை வைத்து குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பள்ளி மாணவர்கள் முன்பு நிகழ்த்திக் காட்டின.

இந்த மோப்ப நாய்களில் குற்றப்பிரிவில் உள்ள அர்ஜூன் 4 வயதான குட்டி. தனது சுட்டித்தனத்தால் கண்காட்சியை கலகலப்பாக்கியது.

லேபர் டாக் வகை நாய்கள் நிதானமாகவும், அதே வேலையில் மோப்பத் திறன் அதிகம் உள்ளவையாகவும் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வெடிபொருட்களை கண்டறிய இந்த லேபர் டாக் வகை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெடிப் பொருட்களை கண்டறிவதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட லேபர் டாக் வகையைச் சேர்ந்த ''பிளாக்கி'' வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பையில் எந்த பையில் வெடிப்பொருள் இருக்கிறது என்பதை தேடி கண்டுப்பிடித்தது.

சுறுசுறுப்பாகவும் அதே வேளையில் மூர்க்கமாகவும் இருக்கும் பாரத் எனும் பெயர் கொண்ட இந்த டாபர்மேன் வகை நாய், போதைப்பொருளை கண்டறிவதில் கில்லாடி என்கின்றனர் போலீசார். சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்களை தேடிக் கண்டறிந்தாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கஞ்சா, அபின் என அனைத்து வகையான போதை பொருட்களின் வித விதமான வாசனையும், சிறு வயதில் இருந்தே அந்த நாய்க்கு பழக்கப் படுத்தப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பைகளில் வெடிப்பொருள் இருந்த பையை சரியாக கண்டறிந்து பாராட்டு பெற்றது பாரத் எனும் இந்த மோப்ப நாய்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments