ஒமிக்ரான் அச்சுறுத்தல் : விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்!
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் 2ஆவது நாளாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, விமான நிலையங்களில் விரைந்து முடிவுகளை பெறுவதற்கான Rapid பரிசோதனைக்கான கட்டணம் 600 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் உள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு தொற்று இல்லாத சூழலில், 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். 8-வது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதில் நெகட்டிவ் என்று அறியப்பட்டாலும், அவர்களது உடல்நிலை மேலும் 7 நாட்கள் கண்காணிக்கப்படும். இப்படியாக 14 நாட்கள் பரிசோதனை கால வளையத்துக்குள் அவர்கள் வைக்கப்படுவார்கள். இதுதவிர்த்து மற்ற நாடுகள், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒமிக்ரான் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த விமான நிலையத்திலேயே தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சுய விபரங்களும் சேகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கான கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தங்களுக்கான பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்து கொள்ள ரேபிட் பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், இதற்கான கட்டணம் 4ஆயிரத்தில் இருந்து 3,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுத்து விட்டால் ஊரடங்குக்கு அவசியம் இல்லை என்ற அவர், முகக்கவசம், தனிநபர் இடைவெளி, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
Comments