ஒரு குண்டான் சோற்றுக்காக இப்படியா புகழ்வது.? அமைச்சரை அதிரவைத்த பெண்மணி
சென்னை மணலி புதுநகரில் வெள்ளச்சேதத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடியிடம், ஒவ்வொரு முறையும் தங்களைப் பார்க்க தண்ணீர் வரவேண்டும் என்று பெண்மணி ஒருவர் கூற, இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று சொல்லுங்கள் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். மழைநீர் தேங்காத பகுதியில் ஏற்படும் திடீர் வெள்ள பாதிப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மற்றும் 16-வது வார்டுப் பகுதிகளை உள்ளடக்கிய மணலி புதுநகரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புக்கள் உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் பகுதியானது, கடந்த 30 நாட்களாக, கொசஸ்தலை ஆற்றுநீரை வடிய வைக்கும் நீர்வழிப்பாதையாக மாறிப்போயுள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் மட்டும் கொசஸ்தலை ஆற்றுநீர் 4-வது முறையாக ஆர்ப்பரித்து ஊருக்குள் புகுந்துள்ளது.
வெள்ளத்துக்கு முன்பாக, ஆற்றின் கரைகளைப் பற்றி கவலை கொள்ளாமலும், உபரிநீர்க் கால்வாயைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறிய அதிகாரிகளின் மெத்தனத்தாலும், ஆற்றுநீருடன் கழிவுநீரும் கலந்து வீதியில் சூழ்ந்துள்ளது.
இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாமல் தவித்து வருகின்றனர்.
மற்ற பகுதிகளைப் போல மழைநீர் வெள்ளம் போல இங்கு தேங்குவது இல்லை..! சென்னையின் குடிநீர்த் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படுகின்ற நீரின் அளவு வரைமுறையில்லாமல் அதிகமாக திறந்து விடப்படுவதால் இந்த வெள்ளச்சேதம் நிகழ்கின்றது.
இந்த நிலையில் வெள்ளச்சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடியிடம், அன்னதானம் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர், "எங்க வீட்ட சுத்தி தண்ணீர் நின்றாலும் , மின்சாரம் தடையில்லாம வருகின்றது.
நீங்க எங்களை பார்க்க வந்திருக்கீங்க ரொம்ப சந்தோசம், ஒவ்வொரு முறை இப்படி தண்ணீர் வந்தாலும் நீங்க வரணும் என்று கூற , இடைமறித்த அமைச்சர் பொன்முடி , அப்படி சொல்லாதீங்கம்மா, இனிமேல் உங்க ஊருக்குள் தண்ணீர் வராமல் இருப்பதற்காகத் தான் , பார்வையிட நாங்கள் வந்திருக்கிறோம்.
ஊருக்குள் வெள்ளம் வராமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளவே முதலமைச்சர் எங்களை அனுப்பி இருக்கின்றார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விச்சூரில் இருந்து மணலி புதுநகருக்குள் வரும் கொசஸ்தலை ஆற்றின் உபரி நீர் வாய்க்கால் கரைகளைக் கரைத்து சில தனி நபர்கள் குடிசை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி இருபுறமும் கான்கிரீட் சுவர்கொண்ட கரை அமைத்தால் மட்டுமே ஊருக்குள் நீர் வருவதை தடுக்க இயலும் என்ற மாற்று வழியையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Comments