ஒமிக்ரான் பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நடைமுறை

0 4740

மிக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் இந்தியாவுக்கு வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது.

கொரோனா இல்லை என முடிவு வந்த பின்தான் விமான நிலையத்தை விட்டு அவர்கள் செல்ல அனுமதித்தாலும், அதன்பின் ஒருவாரம் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அச்சுறுத்தல் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா சோதனைக்கு மாதிரி கொடுத்ததும் முடிவு வருமுன் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் ஒருவாரம் கட்டாயம் வீட்டுத் தனிமையில் இருக்கவும், அறிகுறிகள் இருந்தால் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் விமான நிலையங்களில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்து முடிவு வரும் வரை ஆறுமணி நேரம் வரை காத்திருந்தனர்.

3900 ரூபாய் கட்டணத்தில் ஆன்டிஜென் சோதனை எடுப்பவர்கள் முடிவு வர 3 மணி நேரமும், குறைந்த கட்டணத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை எடுப்பவர்கள் ஆறுமணி நேரம் வரையும் காத்திருக்க வேண்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வருவோர், தனிமைப்படுத்தல் காலத்தில் இரண்டாவது, நான்காவது, ஏழாவது நாட்களில் மூன்று முறை ஆர்டிபிசிஆர் சோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் நாடுகளில் இருந்து வருவோருக்கு சோதனை செய்து கொரோனா இல்லை என முடிவு வந்த பிறகே செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் ஒருவாரம் வீட்டுத் தனிமையில் இருப்பதுடன் எட்டாவது நாள் சோதனை செய்யவும், அதன் பின் ஒருவாரம் தன் கண்காணிப்புக்கு உட்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அச்சுறுத்தல் நாடுகளில் இருந்து வந்த 88 பேருக்கும் சோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. டெல்லியில் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்த 700 பேர் ஒரே நேரத்தில் முடிவுக்காகப் பல மணி நேரம் காத்திருந்தனர்.

ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, சிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments