வங்கக் கடலில் உருவாகிறது புயல்... தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 11531

ந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் எனவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற்று, மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.

இதனையடுத்து, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே 4ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், அடுத்த இரு நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

3,4 ஆகிய தேதிகளில் வங்கக் கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதனிடையே, காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு மழை தரக்கூடிய கீழ்திசை காற்று வலுவாக இல்லாததாலும், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகவும் மழையளவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழையும், நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

4,5 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments