குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம் வேளாண் சட்ட வாபஸ் மசோதா நிறைவேற்றம்!

0 4534

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரின் முதல் நாளில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து, கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் - 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் - 2020 ஆகியவை மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், 3 புதிய வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அண்மையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார். மேலும், அந்த சட்டங்களை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்தபோது, வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், இது பற்றி விவாதிக்க வேண்டும் என மக்களவையில் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கைகள் நிராகரிப்பட்டதை அடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இதனை அடுத்து பிற்பகல் வேளையில் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தபின் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் நலனிற்காகவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை கொண்டுந்ததாக குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து மக்களவை போல் மாநிலங்களவையிலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின், புதிய வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்தாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments