மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் நடன இயக்குனர் சிவசங்கர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியானார். 8 வயது வரை நடக்க இயலாமல் படுத்த படுக்கையாகி, தன்னம்பிக்கையால் எழுந்து 73 வயது வரை சினிமாவில் ஓயாது உழைத்து நடனத்தால் ரசிகர்களை ஆடவைத்த சிவசங்கரின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 800 படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு தனது ரசனையான நடன அசைவுகளால் உயிர் கொடுத்தவர் மாஸ்டர் சிவசங்கர்..!
கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள மாஸ்டர் சிவசங்கர், தெலுங்கு சினிமா ஒன்றின் பாடலுக்கு நடனம் அமைக்க ஹைதராபாத் சென்றிருந்தார்.
அப்போது கொரோனா பாதிப்புக்குள்ளான அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி மாஸ்டர் சிவசங்கர் பரிதாபமாக பலியானார்.
சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர் சிவசங்கர். ஒன்றரை வயது குழந்தையாக இருக்கும் போது உறவினரின் கைகளில் இருந்து கீழே விழுந்ததால் முதுகு தண்டில் காயம் அடைந்து 8 வயது வரை படுத்த படுக்கையாகவே கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மருத்துவரின் முறையான பயிற்சிக்கு பின்னர் எழுந்து நடக்க ஆரம்பித்த சிவசங்கர், தனது தந்தையின் தூண்டுதலால் நடனத்தை சிறுவயதிலேயே பயின்றார். 10 க்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகளுடன் வளர்ந்ததால் இயற்கையாகவே பெண்களுடைய மேனரிசங்கள் இவருடன் ஒட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இவரது பெண்ணிய மேனரிசத்தின் பின்னணியில், உருவான படம் தான் அஜீத்தின் வரலாறு. விஜய்யின் பூவே உனக்காக படத்தில் அனைத்து பாடல்களுக்கும் சிவசங்கர் மாஸ்டர் தான் நடனம் அமைத்தார்
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட்பாடல்களை சிவசங்கர் மாஸ்டர் கொடுத்திருந்தாலும், நடிகர் தனுஷின் ஆரம்பகாலத்தில் மன்மதராசாவுக்காக சிவசங்கர் மாஸ்டர் அமைத்த நடனம் திரையரங்கில் ரசிகர்களை துள்ளாட்டம் போடச்செய்தது.
தெலுங்கில் வெளியான மகதீரா படத்திற்காக தேசிய விருதை பெற்ற சாதனையாளரான , சிவசங்கருக்கு, வயது 72 ஐ கடந்த நிலையிலும், தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றி வந்தார்.
ஆரம்பத்தில் எழுந்து நடக்கவே முடியாது என்று ஒரு சில மருத்துவர்களால் கைவிடப்பட்டாலும், நம்பிக்கை இழக்காமல் எழுந்து நடந்து, நடனத்தில் தனது முத்திரையை தன்னம்பிக்கையால் பதித்தவர் சிவசங்கர்.
கொரோனா என்னும் பெருந்தொற்று மாஸ்டர் சிவசங்கரின் உயிரை பறித்தாலும், அவரது நடன அசைவுகளில் ஹிட் அடித்த சினிமா பாடல்களின் சாயலாய் என்றென்றும் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்
Comments